காளமேகம்

காளமேகம் 15 ஆம் நுற்றாண்டில் வாழ்ந்த ஒரு தமிழ்ப் புலவர் ஆவார். 

சமண சமயத்தில் பிறந்த இவர், திருவானைக்கா கோவிலைச் சேர்ந்த 

மோகனாங்கி என்பவளிடம் ஆசை கொண்டார். இதனால் தனது 
சமயத்தை விட்டு மோகனாங்கி சார்ந்திருந்த சைவ சமயத்துக்கு
 மாறினார். இவர் வசைப் பாடல்கள் பாடுவதில் வல்லவர் என்று
 கூறப்படுகின்றது. ஆனாலும் இவர் பல சிறந்த நயம் மிகுந்த 
பாடல்களையும் பாடியுள்ளார். இவர் பாடிய சிலேடைப் பாடல்களும்,
 நகைச் சுவைப் பாடல்களும் பல உள்ளன. சமயம் சார்ந்த நூல்களையும்
 இவர் இயற்றியுள்ளார்.
திருவானைக்கா உலா, சரஸ்வதி மாலை, பரப்பிரம்ம விளக்கம், சித்திர மடல்
முதலியவை இவர் இயற்றிய நூல்களாகும்.
என்று மஹாகவி காளிதாசனுக்காகக் கவிஞர் கண்ணதாசன் எழுதிய
 பாடல் வரிகளுக்கொப்ப, காளிதேவியின் அருளால் கவிபாடும் 
திறம்பெற்றுத் தமிழிலே கவி மழை பொழிந்த மாபெரும் கவி 
காளமேகம் ஆவார். இவரது இயற்பெயர் வரதன் என்பதாகும். 
வரதன் ஒரு சமணனானாலும் மோஹனாங்கி எனும் சைவ 
சமயத்தைச் சேர்ந்த நடனமாது ஒருத்தியை அவன் மனதாரக்
 காதலித்தான். அவளும் அவன்மேல் தீராத மோஹம் கொண்டிருந்தாள்.
ஒரு முறை நாட்டிய நிகழ்ச்சியொன்றில் மோஹானங்கி
உங்கையிற்பிள்ளை உனக்கே அடைக்கலமென்று
அங்கப் பழஞ்சொல் புதுக்குமெம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன்றுரைப்போம் கேள்
எங்கொங்கை நின் அன்பரல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லாதெப்பணியும் செய்யற்க
கங்குல் பகல் எங்கண் மற்றொன்றும் காணற்க
இங்கிப்பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயிறு எமக்கேலோரெம்பாவாய்.
என்ற திருவெம்பாவைப் பாடலுக்கு அபிநயம் பிடித்து ஆடுகையில்
 அவளது தோழிமார்கள், இப்படிப்பட்ட சைவ சமயப் பாடலுக்கு ஆடும் 
அவள் ஒரு சமணனைக் காதலிப்பது குறித்து கேலியாகப் பேசவே 
அவள் மனம் வேதனைப்பட்டாள். அன்று தன்னைக் காணத் தன் 
விட்டிற்கு வந்த வரதனுக்குக் கதவைத் திறக்காமலேயே இருந்துவிட்டாள்.
 அவள் தான் சமணனாக இருப்பது குறித்து இவ்வாறு பிணங்குகிறாள்
 என்பதைத் தெரிந்துகொண்ட வரதன் அக்கணமே சைவ சமயத்தில் சேர்ந்தான்.
அதன்பின் ஒரு நாள் இரவில் வரதன் திருவானைக்கா கோவிலில் தங்கி
 உறங்கிக்கொண்டிருந்தான். அதே கோவிலில் நீண்ட காலமாகக் காளியின்
 அனுக்கிரஹம் வேண்டி வேறொரு அந்தணன் தவம் செய்துகொண்டிருந்தான்.
 அவனும் அன்றிரவு கோவிலிலேயே உறங்கிக்கொண்டிருந்ததான். காளி தேவி
 அவன் தவத்துக்குப் பலனளிக்க ஒரு சிறுமியாக உருவெடுத்து, தன் வாயில்
 தாம்பூலம் தரித்துக்கொண்டு அவ்வந்தணனை எழுப்பி அவனது வாயில்
 தாம்பூலத்தைத் துப்ப எத்தனித்தாள்.
"யாரடி எச்சிற்றம்பலத்தை என் வாயில் உமிழ்வது?"
என்று அவ்வந்ததணன் கோபம் கொண்டுரைக்கவே அவள் அருகில் படுத்திருந்த 
வரதனை எழுப்பி அவன் வாயில் தாம்பூலத்தை உமிழ முயற்சிக்கையில், அவன்
 அவள் மோஹனாங்கி என்று எண்ணி, எங்கே தான் வாய் திறவாவிடில் மறுபடியும் 
கோபித்துக்கொள்வாளோ என்றெண்ணி வாயைத் திறந்தான். அன்னையின் எச்சில்
 தாம்பூலத்தை உண்ட வரதன் கவிபாடும் புலமை பெற்றான். வாயைத் திறந்து
 சொல்லும் சொற்களனைத்தும் கவிமழையாய்ப் பொழிந்ததால் வரதனை 
அனைவரும் காளமேகம் என்று மரியாதையுடன் அழைக்கலாயினர்









காளமேகப் புலவர் வரலாறு - முதல் அத்தியாயம்:

காளியின் அருள் பெற்றார் காளமேகம்

பிறப்புற்றேன் காளியிடம் பேரன்புற்றேன்,

பேச்செல்லாம் கவிமழையாய்ப் பெருகும் ஞானம்

வரப்பெற்றேன், செல்வத்தின் வளமும் பெற்றேன்,

மன்னருடன் சரிசமமாய் மகிழும் வண்ணம் சிறப்புற்றேன்...


கம்பர், வள்ளுவர், இளங்கோ, ஒளவையார், பாரதியார் என்றெல்லாம் காலத்தால்

அழியாத காவியங்களைச்செய்த கவிப்பெருமக்களைப்பற்றி நாம் அறிவோம். அந்த

வரிசையிலே வரலாற்றுக்கு எட்டாத காலத்திலிருந்து இருபதாம் நூற்றாண்டு வரை

எண்ணிக்கையற்ற புலவர் பெருமக்கள் இனிமைத் தமிழுக்கு வளமை சேர்த்துள்ளனர்.

அவர்கள் ஆக்கியளித்துள்ள இலக்கியங்கள் உலகை வியக்கவைக்கும்

அறிவுக்களஞ்சியங்களாகத் திகழ்கின்றன.

அத்தகையோரின் ஆக்கங்களை அவ்வப்போது அறிஞர்களும், பேச்சாளர்களும்,

எழுத்தாளர்களும் எடுத்தாள்கின்றார்களே தவிர, அவர்களைப்பற்றியும்,

அவர்களின் ஆற்றல்களைப்பற்றியும் அறிந்தவர்களின் எண்ணிக்கை தமிழ்

உலகத்திலே அருகிக்கொண்டே வருகின்றது.

அத்தகைய அறிஞர்களிலே ஒருவர்தான் காளமேகப் புலவர். கி.பி. பதினைந்தாம்

நூற்றாண்டில் வாழ்ந்த அவர் ஆசுகவி, மதுரகவி, சித்திரக்கவி, வித்தாரக்கவி

என்றெல்லாம் புகழ்பெற்றவர். நினைத்தவுடன் எதைப்பற்றியும் கவிதை பாடுவதில்

வல்லவர்களே ஆசுகவி என்று அழைக்கப்படுவார்கள். ஆசுகவிகவிகளிலே

காளமேகப்புலவர் தன்னிகரற்ற பேராற்றல் படைத்தவராய் விளங்கினார்.

காளமேகப் புலவரின் கவிச்சிறப்பைப் சுவைப்பதற்கு முன்னர் அவரைப்பற்றிய

வரலாற்றுக் குறிப்புக்கள் சிலவற்றை அறிந்துகொள்வது அவசியமாகும்.

காளமேகப்புலவர் பாண்டிநாட்டிலே திருமோகூர் என்னும் திருத்தலத்திலே

கோயில்பணியாளராயிருந்த ஒருவருக்கு மகனாகப் பிறந்தார் என்றும், காளமேகம்

என்பது அவரது இயற்பெயரே என்றும் அறிஞர்கள் சிலர் கூறுகின்றார்கள்.

அதேவேளை வரதன் என்பதே அவரது இயற்பெயர் என்று இன்னும் சில அறிஞர்கள்

எடுத்துரைக்கின்றார்கள். அதற்கு ஆதாரமாக, அதிமதுரகவி என்பவர்

இயற்றியதாகச் சொல்லப்படும் பாடலொன்றை ஆதாரமாகக் காட்டுகின்றார்கள்.

வாசவயல் நந்தி வரதா திசையனைத்தும்

வீசுகவி காள மேகமே – பூசுரா

விண்தின்ற வௌ;வழலில் வேவுதே பாவியேன்

மண்தின்ற பாணமென்ற வாய்.

எனவே வரதன் என்பதே அவரின் இயற்பெயர் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவே

இருக்கின்றது.

இளமைப்பருவத்தில் ஸ்ரீரங்கம் திருமால் கோயிலிலே வரதன் கோயிற் பணியாளாக

வேலைபார்த்துக்கொண்டிருந்தார். ஸ்ரீரங்கத்திலிருந்து சிலமைல்கள்

தூரத்திலே இருப்பது திருவானைக்கா என்ற சிவத்தலம். அத்தலத்திலே நடனக்கலை

மூலம் இறைபணிசெய்யும் தேவரடியார்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருத்தியான

மோகனாங்கி மிகவும் அழகானவள். அவளுக்கும் வரதனுக்கும் காதல் மலர்ந்தது.

மோகனாங்கி சிவன் கோயிலில் நடனமாடுபவள். வரதன் திருமால் கோயிலில் கடமை

ஆற்றுபவன். சைவசமயத்தவர்களுக்கும், வைணவ சமயத்தவர் களுக்கும் இடையே

சண்டைகளும் சச்சரவுகளும் நிறைந்திருந்த காலம் அது. தன் காதலுக்கு சமயம்

தடையாக இருப்பதை உணர்ந்த வரதன், காதலுக்காகச் சமயம் மாறத் துணிந்தார்.

திருவானைக்கா சிவத்தலத்திற்குச் சென்றார். சைவசமயத்தில் சேர்ந்தார்.

சிவதீட்சை பெற்றார். காதலும் நிறைவேறியது. அத்தலத்திலேயே அவருக்கு

பணியாளாக வேலையும் கிடைத்தது.

அன்றுமுதல் திருவானைக்காவில் சிவனோடு வீற்றிருக்கும் தேவியை அனுதினமும்

வழிபட்டுவந்தார். தேவியின்மீது தீராத அன்புகொண்ட பக்தனாக வாழ்ந்தார்.

கனவிலே ஒருநாள் வரதனுக்குத் தேவி காட்சி கொடுத்தாள். தேவியின்

திருவருளால் வரதனுக்கு அறிவுக்கண் திறந்தது. கவிபுனையும் ஆற்றல்

பிறந்தது. அன்றுமுதல் கடல்மடை திறந்ததுபோல் கவிமழை பொழிந்தார். காளமேகப்

புலவராய்த் திகழ்ந்தார்.

விஜயநகர வேந்தர்களின் ஆட்சிக்காலத்திலே தமிழகத்தின்

தஞ்சைமாவட்டத்திலுள்;ள திருமலைராயன் பட்டினத்தை தலைநகராகக் கொண்டு

ஆட்சிசெய்த சிற்றரசன் திருமலைராயன். தமிழ் மொழியில் தணியாத ஆர்வம் கொண்ட

திருமலைராயன் தமிழ்ப் புலவர்களைப் போற்றி ஆதரித்தான். அறுபத்துநான்கு

புலவர்களுக்குத் தனது அரசவையிலே இடம்கொடுத்தான். எல்லாவகையான வசதிகளையும்

அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தான்.

தண்டிகைப்புலவர்கள் என்று அழைக்கப்பட்ட அவர்கள் மிகவும்

செருக்குடையவர்களாக இருந்தார்கள். வறுமையால் வாடி மன்னனை நாடிவரும் ஏழைப்

புலவர்களை இகழ்ந்தார்கள். இதுபற்றியெல்லாம் கேள்வியுற்ற காளமேகப்புலவர்

திருமலைராயனின் தமிழார்வத்தை நேரில் கண்டறியவும், தண்டிகைப் புலவர்களின்

செருக்கை அடக்கவும் ஆசைகொண்டார்.

திருமலைராயன் பட்டினத்தில் அவர் கால்வைத்தபோது தெருவழியே வாத்தியங்களின்

இசை முழங்க, மக்களின் வாழ்த்தொலிகள் எழும்ப அலங்கரிக்கப்பட்டி

பல்லக்கொன்றிலே, அதிமதுரக்கவிராயர் என்ற புலவர் சென்றுகொண்டிருந்தார்.

தண்டிகைப் புலவர்களின் தலைமைப்புலவரான அவருக்குக் கிடைக்கும்

மரியாதைகளைக் கண்ட காளமேகப்புலவர் தமிழ்மீது திருமலைராயன் கொண்டிருந்த

பேரார்வத்தை உணர்ந்தார். மனதால் அவனைப் புகழ்ந்தார்.

பல்லக்கில் வந்துகொண்டிருக்கும் அதிமதுரக்கவிராயரை வீதியில்

நிறைந்திருந்த மக்கள் எல்லோரும் வாயாரப் புகழ்ந்து வாழ்த்துக் கோசம்

செய்யும்போது காளமேகப்புலவர் மட்டும் வாய்திறக்காது

பார்த்துக்கொண்டிருப்பதைக் காவலன் ஒருவன் கண்ணுற்றான். அவரிடத்தில் வநது

கவிராயரைப்புகழ்ந்து கோசம் எழுப்பு என்று கட்டளையிட்டான். காளமேகப்

புலவர் கடுங்கோபமுற்றார். உடனே,

அதிமதுரம் என்றே அகிலம் அறியத்

துதிமதுர மாயெடுத்துச் சொல்லும் - புதுமையென்ன

காட்டுச் சரக்குலகிற் காரமில்லாச் சரக்குக்

கூட்டுச் சரக்கதனைக் கூறு

என்று பாடினார். காவலன் இதுபற்றி அதிமதுரக் கவிராயரிடம் எடுத்துரைத்தான்.

கவிராயர் கடும்சினமடைந்தார். அரசனிடம் இதைப்பற்றிக் கோள் மூட்டினார்.

உடனே அரசன் காளமேகப் புலவரைக் கைதுசெய்துவருமாறு காவலர்களுக்குக் கட்டளை

பிறப்பித்தான்.

காளமேகப் புலவர் அரசவைக்கு அழைத்துவரப்பட்டார். அரசனைக்கண்டதும் அவனை

வாழ்த்தினார். ஆனால் அவனோ புலவரை மதிக்காமல், இருக்கையும் கொடுக்காமல்

ஏளனம் செய்தான். புலவர் புன்மமுறுவல் செய்தார். அதிமதுரக்கவிராயரின்

சூழ்ச்சிக்கு அரசன் அடிமையாகிவிட்டான் என்பதை உணர்ந்தார். கண்களை மூடி,

கலைமகளைத் தியானித்தார். தனக்கொரு இருக்கை தருமாறு வேண்டினார்.

கலைவாணியின் அருளால் அரசனின் சிங்காசனம் அகன்று பெரிதாகியது.

இன்னுமொருவர் இருப்பதற்கான இடம் உருவாகியது. புலவர் அதில் சென்று அரசனின்

பக்கத்தில் அமர்ந்தார். புலவரின் ஆற்றல்கண்டு அரசனும் பிரதானிகளும்

வியந்தார்கள். தண்டிகைப் புலவர்கள் பயந்தார்கள். காளமேகப் புலவர்,

கலைவாணியின் அருளைப்போற்றி உடனே கவிபாடினார்.

வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பணிபூண்டு

வெள்ளைக் கமலத்தே வீற்றிருப்பாள் - வெள்ளை

அரியாசனத்தில் அரசரோடென்னைச்

சரியாசனம் வைத்த தாய்.

கலைவாணிக்கு நன்றிசொல்லிப் பாடியபின்னர் காளமேகப்புலவர் அங்கிருந்த

தண்டிகைப்புலவர்களைப் பார்த்து நீங்களெல்லாம் யார் என்று கேட்டார்.

தலைக்கனம்மிக்க அந்தப் புலவர்கள் நாங்கள் கவிராஜர்கள் என்று சொன்னார்கள்.

காளமேகம் உடனே கலகலவெனச் சிரித்தார். சிரித்தபடியே அவர்களை நோக்கிக்

கவிதையொன்றை உதிர்த்தார்.

வாலெங்கே நீண்ட வயிறெங்கே முன்னிரண்டு

காலெங்கே உட்குழிந்த கண்ணெங்கே சாலப்

புவிராயர் போற்றும் புலவீர்காள் நீவிர்

கவிராயர் என்றிருந்தக்கால்.

கவி என்பதற்கு குரங்கு என்பது இன்னுமொரு பொருள். தாங்கள் கவிராஜர்கள்

என்று அவைப்புலவர்கள் சொன்னதும், அப்படியானால் நீங்கள் குரங்குகளா?

குரங்குகள் என்றால் உங்களின் வாலெங்கே? நீளமான வயிறெங்கே? முன்னங்கால்கள்

எங்கே? உட்குழிந்திருக்கும் கண்கள் எங்கே? நீங்கள் குரங்குத்

தலைவர்களென்றால் இவையெல்லாம் இருக்கவேண்டுமே என்று ஏழனமாகப் பாடினார்.

அவைப் புலவர்களுக்குக் கோபம் தலைக்கேறியது. எங்கள் சபையிலேயே எங்களை

ஏளனம் செய்கின்ற நீர் யார் என்று கேட்டார்கள். உடனே காளமேகப்புலவர்

பாட்டிலேயே அதற்கும் பதில் சொன்னார்

தூதஞ்சு நாளிகையில் ஆறுநாளிகைதனில்

சொற்சந்த மாலை சொல்லத்

துகளிலா வந்தாதி யேழுநாளிகை தனில்

தொகைபட விரித்து ரைக்கப்

பாதஞ்செய் மடல்கோவை பத்துநா ளிகைதனில்

பரணியொரு நாண்முழுவ தும்

பாரகா வியமெலா மோரிரு தினத்திலே

பகரக்கொ டிக்கட்டி னேன்

சீதஞ்செ யுந்திங்கண் மரபினான் நீடுபுகழ்

செய்யதிரு மலைரா யன்முன்

சீறுமா றென்றுமிகு தாறுமா றுகள்செய்

திருட்டுக் கவிப் புலவரைக்

காதங்கு அறுத்துச் சவுக்கிட்டு அடித்துக்

கதுப்பிற் புடைத்து வெற்றிக்

கல்லணையி னொடுகொடிய கடிவாள மிட்டேறு

கவிகாள மேகம் நானே.

இந்தப்பாடலிலே தனது புலமையின் திறமையைச் சற்றுக் கர்வத்துடன்

எடுத்துரைக்கின்றார். அரசன் திருமலைராயனைப் புகழ்ந்து

விதந்துரைக்கின்றார். அங்கிருக்கும் புலவர்களை தாறுமாறுகள் செய்யும்

திருட்டுப்புலவர்கள் என்று இகழ்ந்துரைக்கிறார். அத்துடன் அவர்களைச்

சவுக்கால் அடித்து, செவிகளை அறுத்து, கன்னங்களைச் சிதைத்து, கல்லோடு

பிணைத்துக் கடிவாளத்தோடு இணைத்து அவர்கள் மீது ஏறிச் சவாரிசெய்யப்போகின்ற

கவிஞராகிய காளமேகம் நானே என்று சற்றும் தயக்கமின்றி

இறுமாந்துரைக்கின்றார்.

தன்பை; புகழ்ந்தாலும் தனது அரசவைப்புலவர்களை அவமதித்த காளமேகப்புலவரின்

செருக்கை அடக்கி அவரைத் தலைகுனிய வைக்கவேண்டும் என்று திருமலைராயன்

எண்ணினான். காளமேகப் புலவருக்கும் அதிமதுரக்கவிராயருக்குமிடையில்

போட்டியொன்றை ஒழுங்கு செய்தான். அவையிலுள்ள அறுபத்து நான்கு புலவர்களின்

உதவியோடு அதிமதுரக்கவிராயர் போட்டியில் நிச்சயம் வெற்றிபெறுவார் என்று

அவன் திடமாக நம்பினான். ஆனால், யாராலும் பாடுவதற்கு அரியதான எமகண்டம்

பாடி போட்டியில் காளமேகப்புலவர் வெற்றிபெற்றார். அதிமதுரக்கவிராயர் தமது

தோல்வியை ஒப்புக்கொண்டார்.

வெற்றிபெற்ற காளமேகப்புலவரை அரசன் எள்ளளவும் பாராட்டவில்லை. ஏற்றபடி

உபசரிக்கவில்லை. எந்தவித பரிசும் வழங்கவில்லை. தனது அரசவைப் புலவர்களைத்

தோற்கடித்து அவமானப்படுத்திவிட்டதாக அவன் கருதினான். அரசனின் போக்கு

காளமேகப்புலவருக்கு மிகுந்த வேதனையையும், ஆத்திரத்தைக் கொடுத்தது. அது

வசைக்கவியாக வெளிப்பட்டது. திருமலைராயன் பட்டினம் அழிந்து போகட்டும்

என்று வசைபாடினார்.

கோளர் இருக்குமூர் கோள்கரவு கற்றவூர்

காளைகளாய் நின்று கதறுமூர் - நாளையே

விண்மாரி யற்று வெளுத்து மிகக் கறுத்து

மண்மாரி பெய்கவிந்த வான்.

கொலைகாரர்கள் இருக்கின்ற இந்த ஊர், கோள் மூட்டல், வஞ்சகம் செய்தல்

என்பவற்றைக் கற்றிருக்கும் இந்த ஊர், கட்டுப்பாடற்ற காளைமாடுகளைப்போல

கதறித்திரிவோரைக் கொண்ட இந்த ஊர், நாளை முதல் மழைபெய்யாமல் வறண்டு

போகட்டும். மண்ணே மழையாகப் பெய்யட்டும் என்று சாபமிட்டுப் பாடினார்.

அத்துடன் அவரது கோபம் தணியவில்லை மேலும் பாடினார்.

செய்யாத செய்த திருமலைராயன்வரையில்

அய்யா வரனே அரைநொடியில் - வெய்யதழற்

கண்மாரி யான்மதனைக் கட்டழித்தாற் போற் தீயோர்

மண்மாரி யாலழிய வாட்டு

என் அப்பனே சிவபெருமானே! நெருப்பாகவிருக்கும் உனது நெற்றிக்கண்ணினால்

மன்மதனைச் சுட்டெரித்ததுபோல, செய்யத்தகாததையெல்லாம் எனக்குச் செய்த

இந்தத் திருமலைராயனின் ஆட்சி எல்லைக்குள் வாழ்கின்ற தீயவர்கள்

அரைநொடியில் அழிந்துபோகும் வண்ணம் மண்மாரிபொழிந்து அவர்களைவ வாட்டி

வதைப்பாயாக. என்று சிவனை வேண்டிப் பாடினார்.

திருமலைராயனின் செய்கையினால் எந்தஅளவிற்குக் காளமேகப் புலவர் சிந்தை

நொந்திருக்கிறார் என்பது கோபம் நிறைந்த குமுறலாய் வருகின்ற இந்தப்

பாடல்களில் நன்கு புலப்படுகின்றது.

புலவரின் சாபத்தின்படி திருமலைராயன் பட்டினம் சிலகாலத்தில்

அழிந்தொழிந்தது. அவரது தமிழின் வலிமை தமிழ் உலகத்திற்குத் தெரிந்தது.

தமது சிறுமதியின் நிலைமையைத் தண்டிகைப் புலவர்கூட்டம் உணர்ந்தது.

முதுமைக்காலத்தில் அதிமதுரக்கவிராயர் தமது தவறுகளுக்காக வருந்தினார்

காளமேகப்புலவரைக் காண விரும்பினார். ஒருநாள் திருவாரூருக்கு

அவர்வந்திருப்பதை அறிந்து தேடிச்சென்றார். அதற்கிடையில் அவர் அங்கிருந்து

சென்றுவிட்டதாக அறிந்து கவலையடைந்தார். சிலநாட்களில் காளமேகப்புலவர்

முதுமையால் இவ்வுலகை நீத்தார். அந்தச் செய்தியை அறிந்த அதிமதுரக்கவிராயர்

உற்ற நண்பர் ஒருவரை இழந்ததுபோல் மிகவும் துன்பமடைந்தார். தன் மனத்துயரை

வெளிப்படுத்திப் பாடல் புனைந்தார்.

வாசவயல் நந்தி வரதா திசையனைத்தும்

வீசுகவி காள மேகமே – பூசுரா

விண்தின்ற வௌ;வழலில் வேவுதே பாவியேன்

மண்தின்ற பாணமென்ற வாய்.

என்கின்ற அந்தப்பாடல்மூலம்தான் இப்பொழுது காளமேகப்புலவரின் இயற்பெயரைரை

அறிந்துகொள்ள முடிகின்றது.

மேலோட்டமாகப் பார்க்கும்போது விபரீதமாகத் தோன்றும் விதமாகவும்,

உள்ளார்ந்து படிக்கும்போது உயர்ந்த கருத்துக்களைக் கொண்டதாகவும் பல்வேறு

பாடல்களைக் காளமேகப் புலவர் பாடியுள்ளார்.

செருப்புக்கு வீரர்களைச் சென்றுழக்கும் வேலன்

பொருப்புக்கு நாயகனைப் புல்ல – மருப்புக்குத்

தண்டேன் பொழிந்ததிருத் தாமரைமேல் வீற்றிருக்கும்

வண்டே விளக்குமாறே

என்பது அவரது பாடல். இதனை மேலெழுந்தவாரியாகப் பார்த்தால், வேலன்

செருப்புக்காக வீரர்களைத் தாக்குகிறான் என்றும், விளக்குமாறு

தாமரைமலர்மேல் இருக்கிறது என்றும் சொல்லப்பட்டிருப்பதாகத் தோன்றும்.

ஆனால் செருப்புக்கு என்றால் செருக்களம் சென்று, போர்க்களத்திற்குப் போய்

என்பது பொருள். தாமரைமேல் வீற்றிருக்கும் வண்டே விளக்குமாறே என்றால்

தாமரைமலர்மேல் வீற்றிருக்கும் வண்டே எனக்கு விளக்கிச் சொல்வாயாக என்பது

பொருள்.

போர்க்களம் புகுந்து வீரர்களை சிதறடிக்கும் குறிஞ்சி நிலத் தலைவனான வேலனை

நான்தழுவும் வகைபற்றி, தாமரைமலர்மேல் வீற்றிருக்கும் வண்டே எனக்கு

விளக்கிக் கூறுவாயாக என்பது பாடலின் கருத்து.

சிலேடையாகப் பாடுவதில் காளமேகப்புலவர் மிகுந்த ஆற்றல் கொண்டவர். சிலேடை

என்பது ஒருசொல் இருவகைப் பொருள்குறித்து நிற்பது.

நஞ்சிருக்கும் தோலுரிக்கும் நாதர்முடி மேலிருக்கும்

வெஞ்சினத்தில் பற்பட்டால் மீளாது – விஞ்சுமலர்த்

தேம்பாயும் சோலைத் திருமலைரா யன்வரையில்

பாம்பாகும் வாழைப் பழம்

என்பது பாம்பையும் வாழைப்பழத்தையும் சிலேடையாகக் குறித்து நிற்கும்

சுவையான பாடல். பாம்பைப் பொறுத்தவரை அதனிடம் நஞ்சு இருக்கிறது. அதற்குத்

தோல் இருக்கிறது. காலத்திற்குக்காலம் தன்தோலை உரிக்கும் வழக்கம்

இருக்கிறது. சிவனின் சடாமுடியிலே அமர்ந்திருக்கிறது கோபத்திலே அதன்

பற்கள் பட்டுவிட்டால் யாரும் உயிர் தப்பமுடியாது. அதேபோல, வாழைப்பழம்,

நஞ்சிருக்கும் என்றால் நன்கு கனிந்து நைந்து இருக்கும். என்பதுகருத்து.

அதற்கு வெளித் தோல் இருக்கிறது. உண்பதென்றால் அந்தத் தோலை உரிக்கவேண்டிய

தேவை இருக்கிறது. சிவனின் முடிக்கு அபிNஷகம் செய்யப்படும் பழங்களில்

ஒன்றாக இருக்கிறது. வெஞ்சினத்தில் என்றால் இந்த இடத்தில் கோபத்தில் என்று

பொருளல்ல. துணைஉணவாக இருக்கும்போது என்று பொருள்படும். அவ்வாறு

துணையுணவாக உட்கொள்ளும்போது நமது பற்கள் பட்டுவிட்டால் மீளாது,

வயிற்றினுள்ளே சென்றுவிடும். ஆகவே வாழைப்பழமு; பாம்புக்கு நிகராகின்றது

என்பது பாடலின் கருத்தாகின்றது.

சிலேடைச்சிறப்புக்கு இன்னுமொரு பாடல்.

கட்டித் தழுவுதலால் கால்சேர ஏறுவதால்

எட்டிப் பன்னாடை இழுத்தலால் - முட்டப்போய்

ஆசைவாய்க் கள்ளை அருந்துதலால் அப்பனையும்

வேசையென லாமே விரைந்து

என்ற பாடலிலே ஒரு விலைமாதையும், பனைமரத்தையும் சிலேடையாகப் பாடியுள்ளார்.

கட்டித் தழுவுதலால் கால்சேர ஏறுவதால் - பனைமரத்திலே ஏறும்போது அதைக்

கட்டிப்பிடித்துக்கொண்டு இரண்டு கால்களும் மரத்திலிருந்து பிரியாமல்

மரத்தோடு உராய்ந்தவண்ணம்தான் ஏறவேண்டும். ஒரு பெண்ணைத் தழுவும்போதும்

அப்படியே. எட்டிப் பன்னாடை இழுத்தலால் - பனையின் உச்சிக்கு ஏறியதும்,

அங்கே பாளைகளை மறைத்துக்கொண்டு தடையாக இருக்கும் பன்னாடைகளை இழுத்து

களைந்து எறியவேண்டும். பெண்ணுக்கும் ஆடைகளைக் களைதல் வேண்டும்.

முட்டப்போய் ஆசைவாய்க் கள்ளை அருந்துதாலால் - பாளையின் அருகே நெருங்கிச்

சென்று அங்கே சுரந்திருக்கும் கள்ளை அருந்தவேண்டும். பெண்ணையும்

நெருங்கிச் அருகில் சென்று ஆசையோடு இதழ்பருகவேண்டும். எனவே இத்தகைய

பொதுப் பண்புகளால் பனையும் பெண்ணும் ஒன்று.

ஆனால் புலவர் பனையும் பெண்ணும் ஒன்று என்று பாடாமல், 'பனையும்

வேசையெனலாம்' – என்றுதான் பாடியுள்ளார். இங்கு புலவரின் அறிவுக்கூர்மை

நன்கு புலப்படுகின்றது. பனைமரத்தைப் பொறுத்தவரை எல்லோரும் ஏறலாம்.

விலைமாதும் அப்படித்தான் விரும்பியவர் யாரும் அவளிடம் சென்று வரலாம்.

ஆனால், பெண்ணைப் பொறுத்தவரை அப்படியல்ல. பெண் என்று பாடியிருந்தால் அது

பொருட்குற்றமாகிவிடும். ஆதனால்தான் பனையோடு ஒப்பிட்டு வேசை என்று

பாடினார் காளமேகப் புலவர்.

இதேபோல அவருடைய இன்னுமொரு பாடல் தென்னை மரத்தையும் விலைமாதையும்

ஒப்பிடுகின்றது.

பாரத் தலைவிரிக்கும் பன்னாடை மேல் சுற்றும்

சோர இளநீர் சுமந்திருக்கும் - நேரேமேல்

ஏறி இறங்கவே இன்பமாம் தென்னை மரம்

கூறும் கணிகையென்றே கொள்.

பாரத் தலைவிரிக்கும் - தென்னை மரத்தின் ஓலைகள் எல்லாப் பக்கங்களும்

நீண்டு, விரிந்து இருக்கும். கணிகைப் பெண்ணும் கூந்தலை விர்த்துத்

தொங்கவிட்டு அலங்காரம் செய்திருப்பாள். பன்னாடை மேல் சுற்றும் -

தென்னையில் பன்னாடை சுற்றிக் கொண்டிருக்கும். அவளும் பலவண்ண ஆடைகளை

அணிந்திருப்பாள். சோர இளநீர் சுமந்திருக்கும் - தென்னோலைகளுக்குள்

மறைந்து இளநீர்க் குலைகள் தொங்கிக் கொண்டிருக்கும். கணிகையும் இடைதளரும்

வகையில் இளநீர்போன்ற கொங்கைகளைச் சுமந்துகொண்டிருப்பாள். ஏறி இறங்கவே

இன்பமாம் - தென்னையில் ஏறி இளநீர் பருகி இறங்குவது மிகவும் இன்பமாக

இருக்கும். கணிகையும் அப்படித்தான். அதனால் தென்னை மரத்தையும் கணிகைப்

பெண்ணென்று கொள்ளலாம் என்பது பாடலின் பொருள்.

இவ்வாறு எத்தனையோ சிலேடைப் பாடல்களைக் காளமேகப் புலவர் பாடித்

தமிழ்மொழிக்குச் சிறப்புச் செய்திருக்கிறார். அவற்றில், யாiனையையும்

வைக்கோலையும், யானையையும் ஆமணக்குச் செடியையும், பாம்பையும்

தேசிக்காயையும், பாம்பையும் எள்ளையும், நிலவையும் மலையையும், நாயையும்

தேங்காயையும், மீனையும் பேனையும், வெற்றிலையையும் வேசியையும்,

கண்ணாடியையும் அரசனையும், குதிரையையும் காவிரியாற்றையும், குதிரையையும்

கீரைப்பாத்தியையும், குதிரையையும் ஆட்டையும், துப்பாக்கியையும்

ஓலைச்சுருளையும், பூசணிக்காயையும் பரமசிவனையும் ஒப்பிட்டுச் சிலேடையாக

அவர் பாடியுள்ள செய்யுட்கள் செந்தமிழுக்குச் சிறப்பான அணிகளாகவுள்ளன.

ஒருசொல் இருபொருள் குறித்த செய்யுட்கள் மட்டுமன்றி ஒருசொல் மூன்று

பொருள்குறித்த அருமையான பாடல்களையும் அவர் பாடியுள்ளார்

வித்தாரச் செய்யுட்களை இயற்றுவதில் காளமேகப்புலவர் மாபெரும் வித்தகராய்த்

திகழ்ந்தார்.

ஒரு செய்யுளில் வருகின்ற எல்லா எழுத்துக்களுமே தகரவரிசை எழுத்துக்களாக

அதாவது தானாத் தாவன்னா வரி எழுத்துக்களாக மட்டும் அமையக்கூடியதாக அவர்

பாடிய செய்யுளைப் படிக்கும்போது வியந்து நிற்கின்றோம்.

தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி

துத்தித் துதைதி துதைதத்தா தூதுதி

தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த

தெத்தாதோ தித்தித்த தாது?

உரத்துப் படிக்கும்போது பேசும் சக்தியற்ற ஊமை மனிதன் பிதற்றுவது போல

இருக்கும். தகர வரிசை எழுத்துக்களை கண்டவிதமாக அடுக்கி எழுதிவைத்துள்ளது

போல தோன்றும். ஆனால் ஆழ்ந்து படித்துக் கருத்தை அறியும்போது

காளமேகப்புலவரின் திறமையை மட்டுமல்ல, தமிழ்மொழியின் வலிமையையும் எண்ணி

எண்ணி இறும்பூதடையாமல் இருக்க முடியாது.

வண்டொன்றைப் பார்த்துப் பாடுவது போல இந்தப்பாடல் அமைந்துள்ளது.

வண்டே! தத்தித் தாது ஊதுதி – தாவிச் சென்று பூவின் மகரந்தத்தை ஊதி

உண்ணுகின்றாய்.

தாது ஊதித் தத்துதி – மகரந்தத்தை ஊதி உண்டபின்னர் திரும்பவும் எங்கோ

போகின்றாய்.

துத்தித் துதைதி - துத்தி என்று ரீங்காரமிட்டவாறே இன்னுமொரு பூவிற்குச்

செல்கின்றாய்.

துதைது அத்தா ஊதி – அநதப்பூவினை நெருங்கி அதன் மகரந்தத்தையும் ஊதி

உண்ணுகின்றாய்.

தித்தித்த தித்தித்த தாது எது – உனக்குத் தித்திப்பாகத் தித்திப்பாக

இருந்த மகரந்தம் எது? தித்திப்பாகவிருந்த பூ எது? அழகாயிருந்த பூவிதழ்

எது? என்பது இப்பாடலின் கருத்து.

தாது என்ற சொல் மலரையும் குறித்து வந்திருக்கிறது. மலரின் இதழையும்

குறித்து வந்திருக்கின்றது. மகரந்தத்தையும் குறித்து வந்திருக்கின்றது.

இதேபோல இன்னுமொரு அருமையான பாடல் உண்டு.

காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை

கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க – கைக்கைக்குக்

காக்கைக்குக் கைக்கைக்கா கா.

மேலோட்டமாகப் பார்த்தால் ஏதோ உளறுவதைப்போலத்தான் இந்தப் பாடலும்

தோன்றும்.. சொற்களைப் பிரித்து, பொருள் கண்டு படித்தால் தமிழின் சுவையில்

உள்ளமெல்லாம் இனிக்கும்..

காக்கைக்கு ஆகா கூகை – காகத்திற்கு கூகையை வெல்ல முடியாது.

கூகைக்கு ஆகா காக்கை - கூகைக்குக் காகத்தை வெல்ல முடியாது.

கோக்கு கூ காக்கைக்கு – அரசன் தன்நாட்டைப் பகைவரிடமீருந்து காப்பதற்கு

கொக்கொக்க – கொக்கைப் போல, கைக்கைக்கு காக்கைக்கு – பகையை எதிர்த்து

நாட்டைக் காப்பதற்கு

கைக்கு ஐக்கு ஆகா – சிறந்த அரசனாலும் முடியாமல் போய்விடும்.

என்பது கருத்து.

இதன் விரிவான கருத்து என்னவென்றால், காகத்தினால் கூகையை இரவில் வெல்ல

முடியாது. ஏனென்றால் காகத்திற்கு இரவில் கண் தெரியாது. கூகையால்

காகத்தைப் பகலில் வெல்ல முடியாது ஏனென்றால் கூகைக்குப் பகலில் கண்

தெரியாது. அதே போல, ஓர் அரசன் தன் நாட்டைப் பகைவரிடமிருந்து

காக்கவேண்டுமென்றால் ஓடுமீன் ஓடி உறுமீன் வருமளவும் காத்திருக்கும்

கொக்கைப் போல காத்திருக்க வேண்டும். சாதகமான சமயம் வரும்வரை

பொறுத்திருக்க வேண்டும். இல்லையென்றால், பலம்பொருந்திய அரசனாலும் பகையை

எதிர்த்துத் தன் நாட்டைக் காக்க முடியாமல் போய்விடும். என்பதாகும்.

எவ்வளவு உயர்ந்த கருத்து! அதை வெறும் ககர வரி எழுத்துக்களை மட்டும்

கொண்டு அமைந்த செய்யுளில் அடக்கியிருக்கிறார் காளமேகப் புலவர்.

இழித்துரைப்பதுபோலப் புகழ்ந்து பாடுவதிலும் காளமேகப் புலவர் வல்லவர்.

சிவபெருமானைப்பற்றி அவ்வாறு பல செய்யுட்களை அவர் படியுள்ளார்.

கண்டீரோ பெண்காள் கடம்பவனத் தீசனார்

பெண்டீர் தமைச்சுமந்த பித்தனார் - எண்டிசைக்கும்

மிக்கான தங்கைக்கு மேலே நெருப்பையிட்டார்

அக்காளை ஏறினாராம்.

பெண்களைச் சுமந்திருக்கும் காமப்பித்துப்பிடித்த ஈசன் தங்கையையும்,

அக்காவையும் கெடுத்துவிட்டார் என்று அவமதிப்பதுபோல இந்தப்பாடல்

அமைந்திருக்கின்றது.

ஆனால் சரியான கருத்து இறைவனின் பெருமை கூறுவதாக இருக்கிறது. கடம்ப

வனத்திலே இருக்கும் ஈசனாகிய சிவபெருமான், தலையிலே கங்கையையும், தன்

உடலிலே பாதியாக உமாதேவியையும் சுமந்திருக்கின்ற பித்தர்,

எட்டுத்திசைகளுக்கும் மிக்க புகழ்பெற்ற தன் கையிலே அக்கினியை

வைத்துக்கொண்டிருப்பவர், காளைமாட்டினை வாகனமாகக் கொண்டு அதில்

ஏறிவருபவர். அவரைக் கண்டீர்களா பெண்களே! என்பதே பாடலின் உட்பொருளாக

உயர்ந்து நிற்கின்றது.

இதைப்போலவே,

வில்லா லடிக்கச் செருப்பாலுதைக்க வெகுண்டொருவன்

கல்லா லெறியப் பிரம்பாலடிக்க விக் காசினியில்

அல்லார் பொழிற்றில்லை யம்பலவாணர்க்கோ ரன்னைபிதா

இல்லாத தாழ்வல்லவோ இங்ஙனே யெளிதானதுவே

என்னும் பாடலிலும் சிவனின் திருவிளையாடல் கதைகளைத் தொடர்புபடுத்தி

தாய்தந்தை இல்லாமை தாழ்வானதுபோலச் சொற்களை அமைத்து, இறைவனின் அனாதியான

உயர்ந்த தன்மையை உட்பொருளாக கொண்டு செய்யுளைப் பாடியுள்ளார்.

காளமேகப்புலவர் தன் புலமையில் மிகுந்த கர்வம் கொண்டவர் மட்டுமன்றிக்

கடுங்கோபக்காரருங்கூட. தன்னை யாரும் அவமதித்தால்

அதனைத் தாங்கிக்கொள்ளவே மாட்டார். தமிழால் அவர்களைச் சாடி பதிலுக்கு

ஏளனம் செய்துவிடுவார்.

திருமலைராயன் தன்னை அவமதித்தமைக்காக அவனது நகரத்தையே அழிந்துபோகும்படி

சாபமிட்டவரல்லவா? அப்படிப்பட்ட புலவரை ஒருமுறை இஞ்சிகுடி என்னும் ஊரிலே

வாழ்ந்த கலைச்சி என்ற தாசிப்பெண்ணொருத்தி மரியாதையின்றிப்

பேசியிருக்கிறாள். உடனே புலவர் அவமதித்து வசைபாடியிருக்கிறார்.

ஏய்ந்த தனங்கள் இரண்டும் இரு பாகற்காய்

வாய்ந்தவிடை செக்குலக்கை மாத்திரமே – தேய்ந்த குழல்

முக்கலச்சிக் கும்பிடிக்கு மூதேவியாள்கமலைக்

குக்கலிச்சிக் குங்கலைச்சிக் கு.

தெருநாய்மட்டுமே அவளின் அருகே செல்லக்கூடிய கலைச்சி என்பவள், மயிர்கள்

உதிர்ந்து, அளவில் தேய்ந்து, சிக்குப்பிடித்த தலைமுடியும்,

பாகற்காய்களைப்போல ஒட்டி உலர்ந்து தொங்குகின்ற இரண்டு மார்பகங்களும்,

செக்குலக்கையைப் பொன்ற இடையும் கொண்ட மூதேவி என்பது பாடலின் கருத்து.

ஒரு பெண்ணின் உடலை, அவள் தாசியாக இருந்தாலும்கூட இவ்வளவு இழிவாகப்

பாடியுள்ளார் என்பதிலிருந்து அவள்மீது அவர் எவ்வளவு கோபப்பட்டிருக்கிறார்

என்பதை உணர முடிகிறது.

காளமேகப் புலவரின் அதிகமான பாடல்கள் நக்கலும், நையாண்டியுமாக அமைந்தவை.

நகைச்சுவை நிறைந்தவை.

பால்காரர்கள் பாலிலே நீர்கலப்பதைப்போல, மோர் விற்பவர்கள் மோரிலே நீரை

அதிகமாகக் கலந்து விற்பது வழக்கம். ஒருமுறை காளமேகப்புலவர் மோர்விற்கும்

ஒருத்தியிடம் வாங்கிக்குடித்த மோரிலே நீர் மிகவும் அதிகமாகவே

கலக்கப்பட்டிருந்ததை உணர்ந்தார். மோரிலே நீரைக்கலந்தது போலன்றி, நீரிலே

மோரைக்கலந்ததுபோல அவருக்குத் தோன்றியது. அதனால் மோர் என்று அவள்

கொடுத்தது அவருக்கு நீர்போலத் தோன்றுவதாகக் கருத்தமைத்து அவளது மோரை

இகழ்ந்து பாடினார்.

கார் என்று போர்படைத்தாய் ககனத் துறும்போது

நீரென்று பேர்படைத்தாய் நீள்தரையில் வந்ததற்பின்

வாரொன்று மென்முலையாராய்ச்சியர்கை வந்ததற்பின்

மோரென்று பேர் படைத்தாய் முப்பெரும் பெற்றாயே.

வானத்தை அடையும்போது கார் என்று உனக்குப் பெயர். மழையாகப் பெய்து

பூமிக்கு வந்தபின்னர் நீர் என்பது உனது பெயர். மார்புக்கச்சையணிந்த

மென்மையான தனங்களையுடைய ஆய்ச்சியர்களின் கைகளிலே வந்த பின்னர் உனக்கு

மோர் என்று; பெயர். ஆகமொத்தம் மூன்று பெயர்கள் உனக்கு இருக்கிறதே என்று

அந்த மோரைப் பார்த்து பாடியிருக்கிறார்.

காளமேகப் புலவர் நாகபட்டினத்திற்குச் சென்றிருந்தபோது, காத்தான் வர்ணகுல

ஆதித்தனின் பெயரில் அங்கேயிருந்த சத்திரத்திலே சாப்பிடுவதற்காகச்

சென்றார். மதியச் சாப்பாட்டுக்காக அவர் காத்திருந்தார். மாலையாகிய

பின்னர்தான் மதியச் சாப்பாடு கிடைத்தது. அதுவரை புலவருக்குப்

பசிவயிற்றைக் குடைந்தது. கோபம் மனதில் எழுந்தது. உடனே பாட்டு சுரந்தது.

கத்துக் கடல்சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில்

அத்தமிக்கும்போதில் அரிசி வரும் - குத்தி

உலையில் இட ஊரடங்கும் ஓகைப்பை அன்னம்

இலையிலிட வெள்ளி எழும்.

ஒலியெழுப்பும் கடல்சூழ்ந்த இந்த நாகப் பட்டினத்தில் உள்ள காத்தானின்

சத்திரத்திலே, சூரியன் மறைகின்றபோதுதான் அரிசி வந்து சேரும். அதைத்

தீட்டி உலையிலே போடும்போது ஊரே அடங்கிப்போய்விடும் அதாவது இரவாகி,

ஊரவர்கள் நித்திரையாகிவிடுவார்கள். சாப்பிட வந்தவர்களுக்கு ஓர் அகப்பைச்

சோற்றை இலையிலே வைக்கும்போது வானத்தில் விடிவெள்ளி தோன்றிவிடும். அதாவது

மறுநாள் புலரும் வேளை வந்துவிடும். இதெல்லாம் ஒரு சத்திரமா? என்று

இழித்துப் பாடியுள்ளார்.

சத்திரத்தில் இலவசமாகப் போடும் சாப்பாடு பிந்தியதற்கே இப்படியென்றால்

காளமேகப் புலவரின் வாழ்க்கை முழுவதும் எத்தனையெத்தனை சம்பவங்கள்

நடந்திருக்கும்? எத்தனையெத்தனை நகைச்சுவைப் பாடல்கள் எழுந்திருக்கும்.?

அத்தனையும் இப்போது கிடைக்கப்பெற்றால் அவையெல்லாம் தமிழுக்கு

அணிகலன்களாய் குவிந்திருக்கும்.

மக்கள் பலர் தன்னைச் சூழ்ந்துவர, தலைவன் உலாவருவதை வர்ணித்துக் கூறுவதாக



அமைந்தது திருவானைக்கவுலா என்ற நூல். சித்திரமடல். என்பது காதல்



தோல்வியடைந்த ஒருவர் தன்னை வருத்திக்கொள்வதான பொருளமைந்த நூல்



காளமேகப் புலவரின் புகழ் காலத்தால் மறையாது நிலைத்திருப்பதற்கு அவர்



பாடிய தனிப்பாடல்களே பெரிதும் காரணமாகும். வசைபாடக் காளமேகம் என்று



புலவர் பெருமக்களால் போற்றப்பட்ட காளமேகப் புலவரின் பாடல்கள் அத்தனையும்



படிக்கப் படிக்க இன்பம் தருவன. நினைக்க நினைக்க மகிழ்ச்சி கொடுப்பன.





தமிழ்மொழியின் செழுமைக்கும், வலிமைக்கும், இனிமைக்கும் சான்றாய் திகழ்வன.யும் பாடல்களை

இயற்றியுள்ளார். அவ்வாறு அவர் பாடி ஆக்கிவைத்த நூல்கள் திருவானைக்கா உலா,

சித்திரமடல் என்பனவாகும்.

மக்கள் பலர் தன்னைச் சூழ்ந்துவர, தலைவன் உலாவருவதை வர்ணித்துக் கூறுவதாக

அமைந்தது திருவானைக்கவுலா என்ற நூல். சித்திரமடல். என்பது காதல்

தோல்வியடைந்த ஒருவர் தன்னை வருத்திக்கொள்வதான பொருளமைந்த நூல்

காளமேகப் புலவரின் புகழ் காலத்தால் மறையாது நிலைத்திருப்பதற்கு அவர்

பாடிய தனிப்பாடல்களே பெரிதும் காரணமாகும். வசைபாடக் காளமேகம் என்று

புலவர் பெருமக்களால் போற்றப்பட்ட காளமேகப் புலவரின் பாடல்கள் அத்தனையும்

படிக்கப் படிக்க இன்பம் தருவன. நினைக்க நினைக்க மகிழ்ச்சி கொடுப்பன.


தமிழ்மொழியின் செழுமைக்கும், வலிமைக்கும், இனிமைக்கும் சான்றாய் திகழ்வன.

Comments

Popular posts from this blog

டாக்டர் மு.வரதராசனார் (1912 – 1974)

அருணகிரிநாதர்